வெள்ளி, 20 நவம்பர், 2015

“கடவுள் தமிழ்நாட்டை கெடுத்து வைத்திருக்கிறார் !”

                               ஜல் புருஷ்... 'இந்தியாவின் தண்ணீர் மனிதன்’ என அழைக்கப்படுபவர் ராஜேந்திர சிங். உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ இந்த ஆண்டு ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 'நீருக்கான நோபல் பரிசு’ என அழைக்கப்படும் இந்த விருதைப் பெறும் அளவுக்கு இவர் என்ன செய்தார்? ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களில் முழுமையான மழைநீர் சேகரிப்பை அமல்படுத்தி, தண்ணீர் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அவற்றை உருவாக்கியிருக்கிறார். சமகால இந்தியா எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சிக்கலான நீர்ப் பிரச்னையைச் சரிசெய்வதையே தன் வாழ்நாள் பணியாகக்கொண்டிருக்கும் ராஜேந்தர் சிங்கை, 'பூமியைக் காக்கும் உலகின் 50 நபர்களில் ஒருவர்’ எனப் பட்டியலிடுகிறது புகழ்பெற்ற 'தி கார்டியன்’ பத்திரிகை. 
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சென்னையில் கடந்த வாரம் நடத்திய 'தண்ணீருக்கான பொதுமேடை’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பதற்காக வந்திருந்த ராஜேந்தர் சிங்கைச் சந்தித்தபோது உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த குரலில் அனைத்தையும் பற்றி பேசினார்.
''நான் பிறந்தது உத்தரப்பிரதேசம். பிறகு ராஜஸ்தானில் குடியேறிவிட்டேன். நிலமும் காற்றும் ஈரப்பதத்தை இழந்து தொடர்ந்து வெப்பமாகிக்கொண்டே செல்லும் இந்தச் சூழல் காலம்காலமாக வந்தது இல்லை. மனிதர்கள் வரம்பு கடந்து இயற்கையைச் சுரண்டியதன் விளைவு இது. இதைச் சரிசெய்ய முடியும் என நம்பினேன். 'தருண் பாரத் சங்க்’ என்ற தன்னார்வக் குழுவில் பணிபுரிந்தபோது, பல்வேறு கிராமங்களுக்கும் சுற்றினேன். அப்போது நான் கண்ட காட்சிகள்... குறிப்பாக அல்வார் மாவட்டத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் வறட்சியின் நெடி பரவிக் கிடந்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு, விவசாயமே செய்ய முடியாத நிலை. வாழ்வாதாரம் இல்லாததால் கிராமங்களில் வயதானவர்களும் குழந்தைகளும் மட்டும்தான் இருந்தனர். இளைஞர்கள் அனைவரும் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்து அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். இருந்த முதியவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தனர். குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் சோகையாக இருந்தனர். அவர்கள் பள்ளிக்கும் செல்லவில்லை. விவசாயம் இல்லாததால் கால்நடைகளும் இல்லை. அந்தக் கிராமங்கள் முழுமையாகக் கைவிடப்பட்டவையாக இருந்தன.
கோபால்புரா என்ற கிராமத்தில் இருந்து வேலையைத் தொடங்கினேன். அது 1985-ம் ஆண்டு. நான் கிராமத்தில் மீதம் இருந்தவர்களை அணுகி 'இந்த ஊரில் ஒரு குளம் வெட்ட வேண்டும்’ என்றபோது என்னைக் கேலியும் கிண்டலுமாகப் பார்த்தனர். என் நண்பர்கள்கூட என்னை நம்பவில்லை. இருப்பினும் நான் நம்பிக்கையைக் கைவிடவில்லை. தன்னந்தனியாக குளம் வெட்டத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் 10-ல் இருந்து 12 மணி நேரம் இதற்காகச் செலவிட்டேன். என்னை ஒரு பைத்தியக்காரனைப்போல பார்த்தார்கள். ஆனால், என் மன உறுதியை நான் அதிகரித்துக்கொண்டே இருந்தேன். ஒன்று, இரண்டு... மொத்தம் நான்கு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்து அந்தக் குளத்தை வெட்டி முடித்தேன். அடுத்து வந்த மழையில் குளம் நிரம்பியது. தண்ணீர் குளத்தில் தேங்கி நிற்கத் தொடங்கியதும், அதைச் சுற்றியிருந்தப் பகுதிகளின் நீர் மட்டம் அதிகரித்தது. கிராமத்தில் செழிப்பு எட்டிப் பார்த்தது. ஒருசிலர் விவசாயம் செய்யத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து மேலும் சிலர் தொடங்க... இந்தச் செய்தி, இடம்பெயர்ந்து சென்றிருந்த கிராமத்தின் இளைஞர்களுக்குச் சென்றது. அவர்கள் ஊருக்குத் திரும்பிவந்து உற்சாகத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
கோபால்புராவுடன் இந்த மாற்றம் நின்றுவிடவில்லை. அருகில் உள்ள கிராமங்களில் இருப்பவர்கள் எல்லோரும் இவர்களின் உறவினர்கள்தான். விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சொந்த கிராமங்களுக்குத் திரும்பினர். எல்லோரும் 'கோபால்புரா’வை ஒரு முன்மாதிரி கிராமமாகக்கொண்டு தங்கள் ஊர்களிலும் குளங்களை வெட்ட ஆரம்பித்தனர். மக்களின் ஆர்வத்தைச் செயலாக மாற்றும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஒரே ஆண்டில்
36 கிராமங்களில் குளம் வெட்டி முடித்தோம். அதன்பிறகு செய்த ஒவ்வொரு செயலுக்கும் மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது. எந்த ஒரு நீர் ஆதார முயற்சிக்கும் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் பங்கேற்பும் மிக மிக அவசியம். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கி, ஒதுங்கினாலும் படிப்படியாக இணைந்துகொள்வார்கள். மக்கள் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமும், அதன் நோக்கத்தை நிறைவுசெய்வது இல்லை என்பது எங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.''
''பல்லாண்டுகளாகத் தண்ணீரே பாயாத நதி ஒன்றை மீட்டெடுத்தீர்கள் எனச் சொல்லப்படுகிறதே... அதைப் பற்றி சொல்லுங்கள்?''
''ஒருகாலத்தில் ஏராளமான கிராமங்களை வளம் அடையச் செய்த நதி ஆர்வாரி. ஆனால், காலப்போக்கில் அது அடியோடு வறண்டுவிட்டது. அதை மீட்க மக்களின் உதவியுடன் களம் இறங்கினோம். ஆற்றுப்படுகை முழுக்க சிறிது, சிறிதாக ஏராளமான தடுப்பணைகள் கட்டினோம். வசதிப்படும் இடத்தில் கட்டாமல், எங்கு நிலப்பிளவு இருக்கிறதோ அங்கு அணை கட்டினோம். அணைகள் அந்தந்த நிலப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப கட்டப்பட்டன. தண்ணீர், மலையில் இருந்து கீழே விழும் இடத்தில் அதன் வேகம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களில் வேகம் குறைவாக இருக்கும். இதைக் கருத்தில்கொண்டு, அணையின் வடிவத்தை ஒவ்வோர் இடத்துக்கும் ஏற்றாற்போல மாற்றிக்கொண்டோம். அணை என்றால் நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் தோற்றத்தில் அது இருக்காது. முக்கோணமாக, நீளமாக, உள்ளே வளைந்து... என இடத்தின் தேவைக்கு ஏற்ப இருக்கும். நாங்கள் இரும்பு, சிமென்ட் கொண்டு அணை கட்டுவது இல்லை. சுண்ணாம்பு, கல், மண் என பாரம்பர்யப் பொருட்களைக்கொண்டே கட்டுவதால், இது சாத்தியம். இப்படி ஆர்வாரி நதியில் மொத்தம் 115 தடுப்பணைகள் கட்டினோம். பெய்யும் மழைநீர் நிலத்தடி நீராகவும், நிலத்தின் மேற்பகுதி நீராகவும் சேர்ந்தது. படிப்படியாக எல்லாம் உயிர்பெற்று... ஆர்ப்பரித்து ஓடத் தொடங்கியது ஆர்வாரி நதி. எத்தனையோ ஆண்டுகளாகத் தூர்ந்துகிடந்த அந்த நதி, 1995-ம் ஆண்டு முதல் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் நதியாக மாறியிருக்கிறது. ஒரு குளத்தில் தொடங்கிய மாற்றம், ஒரு நதியை மீட்கும் பெரும் வெற்றியில் முடிந்தது!
இதைத் தொடர்ந்து ஆரவல்லி மலைகளின் குறுக்கே சிறுசிறு தடுப்பணைகளும் 7 மீட்டர் உயரம்கொண்ட காங்கிரீட் அணையும் கட்டினோம். இதனால், 60 ஆண்டுகளாக வறண்டிருந்த ஆரவல்லி ஆற்றில் மீண்டும் தண்ணீர் ததும்பியது. அது அப்படியே தொடர்ந்து ரூபரேல், சர்ஸா, பஹானி, ஜஹாஜ்வாலி என வறண்டுகிடந்த நான்கு நதிகளை மீட்டோம். இந்த நதிகளை நாங்கள் உருவாக்கவில்லை; கண்டுபிடிக்கவில்லை. அவை ஏற்கெனவே இருந்தன. ஆனால் கைவிடப்பட்டிருந்தன. அவற்றை மீண்டும் உயிர்த்துடிப்புள்ள நதிகளாக மாற்றினோம். இவற்றையும் சேர்த்து, ராஜஸ்தான் மாவட்டத்தின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறோம். இதன் விளைவாக வறண்டு கிடந்த ஒரு லட்சம் கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. வறண்டு கிடந்த பூமியில் இப்போது விவசாயம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு 450 மி.மீ மழை மட்டுமே பெறும் அல்வார் மாவட்டத்தில், ஒரு ஹெக்டேர் நிலத்தில் 4,600 ரூபாய் வருமானம் எடுத்த விவசாயிகள், தற்போது 31 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் மானாவாரி பயிர்கூட செய்ய முடியாமல் தவித்த கிராமங்களில், இப்போது அதிக தண்ணீர் தேவைப்படும் கரும்பை பயிர் செய்கிறார்கள்.''
'' 'கடவுள், தமிழ்நாட்டுக்கு அதிகம் மழையைக் கொடுத்துக் கெடுத்துவைத்துள்ளார்’ எனச் சொல்லியிருக்கிறீர்களே..?''
''ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்கியிருக்கும் நிலையில், இதில் பாதியளவே மழை பெறும் ராஜஸ்தானில் அந்தப் பிரச்னை இல்லை. இது ஏன்? சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் தண்ணீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெயர் அளவுக்கே செய்யப்படுகின்றன. பக்கத்து மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்; அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை.'' https://www.facebook.com/SPACE-195178687352522/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக