ஊத்துக்கோட்டை அருகே சென்னைக்கு குடிநீர் வழங்க 1100 ஏக்கரில் புதிய ஏரி: டிசம்பரில் தண்ணீரை தேக்க ஏற்பாடு
பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 21
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகள் அனைத்தும் மழை நீரை நம்பிதான் உள்ளது. பூண்டி ஏரிக்கு மட்டும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வருவது வழக்கம்.
இதே போல் வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையின் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆறு மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
மழை பொய்ந்து விடும் போது கோடை காலங்களில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டையில் உள்ள ஏரிகளை ஒன்று சேர்த்து ரூ.330 கோடி செலவில் மிக பிரம்மாண்ட நீர் தேக்கம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தார்.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை பகுதிகள் இயற்கையாகவே ஆழமான பகுதிகளாக உள்ளன. மேற்கூறப்பட்ட 2 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு ஆந்திர மாநிலம் சத்தியவேடு காட்டு பகுதிகளில் உள்ள மதனம்பேடு, பாலகிருஷ்ணாபுரம், மதனஞ்சேரி, ராஜகுண்டா ஆகிய ஓடைகள் மூலம் வருடத்துக்கு 0.3 டிஎம்சி மழை நீர் வருகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட 2 ஏரிகளில் 41 மில்லியன் கனஅடி நீர் மட்டும் சேமித்து வைக்க முடியும். மீதமுள்ள தண்ணீர் வங்க கடலில் வீணாக போய் சேருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த பகுதியை நீர் தேக்கம் அமைக்க தேர்ந்தெடுத்தது.
நீர் தேக்கம் அமைக்க, கிருஷ்ணா நதி நீரை கண்ணன் கோட்டை நீர் தேக்கத்துக்கு கொண்டு செல்ல கால்வாய் அமைக்க 1485 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில் 800 ஏக்கர் பட்டா நிலம். 630 ஏக்கர் புறம்போக்கு நிலம். 55 ஏக்கர் வனத்துறைக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. பட்டா நிலம் உரிமையாளர்களுக்கு ஏக்கர் 1க்கு ரூ. 13 லட்சம் விதம் 477 பேருக்கு அரசு பணம் பட்டுவாடா செய்துள்ளது. மீதம் உள்ள 250 பேர் பணம் வாங்க மறுப்பதால் பணத்தை பொன்னேரி கோர்ட்டில் அரசு செலுத்தி உள்ளது. கண்ணன் கோட்டை– தேர்வாய் ஏரிகளை ஒன்றிணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. நீர் தேக்கம் மட்டும் 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. 385 ஏக்கர் நிலப்பரப்பில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 14 மீட்டர் உயரத்தில் 11½ கிலோ மீட்டர் சுற்றளவில் நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. 1 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் விதத்தில் நீர் தேக்கம் கட்டப்படுகிறது.
அதாவது 1000 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளியில் கால்வாயின் குருக்கே தடுப்பு அமைத்து அங்கிருந்து கண்ணன் கோட்டை நீர் தேக்கத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல உள்ளனர்.
சத்தியவேடு காட்டு பகுதியில் உள்ள ஓடைகளின் நீரும், கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும். இதற்காக ஜங்காலபள்ளியிலிருந்து கண்ணன்கோட்டை நீர் தேக்கம் வரை 8.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.
கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமிக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் 13 கிலோ மீட்டர் தூரத்தில் ஊத்துக்கோட்டை அம்பேத்கார்நகர் பகுதியில் கிருஷ்ணா கால்வாய்க்கு அனுப்பி, அங்கிருந்து தண்ணீர் பூண்டி வந்து சென்னைக்கு அனுப்பப்படும். இதற்காக கண்ணன் கோட்டை நீர் தேக்கத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ. 100 கோடி செலவில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க உள்ளனர்.
நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், டிசம்பரில் தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.https://www.facebook.com/SPACE-195178687352522
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக