வெள்ளி, 20 நவம்பர், 2015

“கடவுள் தமிழ்நாட்டை கெடுத்து வைத்திருக்கிறார் !”

                               ஜல் புருஷ்... 'இந்தியாவின் தண்ணீர் மனிதன்’ என அழைக்கப்படுபவர் ராஜேந்திர சிங். உலக அளவில் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ இந்த ஆண்டு ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 'நீருக்கான நோபல் பரிசு’ என அழைக்கப்படும் இந்த விருதைப் பெறும் அளவுக்கு இவர் என்ன செய்தார்? ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களில் முழுமையான மழைநீர் சேகரிப்பை அமல்படுத்தி, தண்ணீர் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக அவற்றை உருவாக்கியிருக்கிறார். சமகால இந்தியா எதிர்கொள்ளும் ஆகப் பெரிய சிக்கலான நீர்ப் பிரச்னையைச் சரிசெய்வதையே தன் வாழ்நாள் பணியாகக்கொண்டிருக்கும் ராஜேந்தர் சிங்கை, 'பூமியைக் காக்கும் உலகின் 50 நபர்களில் ஒருவர்’ எனப் பட்டியலிடுகிறது புகழ்பெற்ற 'தி கார்டியன்’ பத்திரிகை. 
'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சென்னையில் கடந்த வாரம் நடத்திய 'தண்ணீருக்கான பொதுமேடை’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பதற்காக வந்திருந்த ராஜேந்தர் சிங்கைச் சந்தித்தபோது உறுதியும் நம்பிக்கையும் நிறைந்த குரலில் அனைத்தையும் பற்றி பேசினார்.
''நான் பிறந்தது உத்தரப்பிரதேசம். பிறகு ராஜஸ்தானில் குடியேறிவிட்டேன். நிலமும் காற்றும் ஈரப்பதத்தை இழந்து தொடர்ந்து வெப்பமாகிக்கொண்டே செல்லும் இந்தச் சூழல் காலம்காலமாக வந்தது இல்லை. மனிதர்கள் வரம்பு கடந்து இயற்கையைச் சுரண்டியதன் விளைவு இது. இதைச் சரிசெய்ய முடியும் என நம்பினேன். 'தருண் பாரத் சங்க்’ என்ற தன்னார்வக் குழுவில் பணிபுரிந்தபோது, பல்வேறு கிராமங்களுக்கும் சுற்றினேன். அப்போது நான் கண்ட காட்சிகள்... குறிப்பாக அல்வார் மாவட்டத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் வறட்சியின் நெடி பரவிக் கிடந்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு, விவசாயமே செய்ய முடியாத நிலை. வாழ்வாதாரம் இல்லாததால் கிராமங்களில் வயதானவர்களும் குழந்தைகளும் மட்டும்தான் இருந்தனர். இளைஞர்கள் அனைவரும் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்து அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்றுவிட்டனர். இருந்த முதியவர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தனர். குழந்தைகள் சத்துக் குறைபாட்டால் சோகையாக இருந்தனர். அவர்கள் பள்ளிக்கும் செல்லவில்லை. விவசாயம் இல்லாததால் கால்நடைகளும் இல்லை. அந்தக் கிராமங்கள் முழுமையாகக் கைவிடப்பட்டவையாக இருந்தன.
கோபால்புரா என்ற கிராமத்தில் இருந்து வேலையைத் தொடங்கினேன். அது 1985-ம் ஆண்டு. நான் கிராமத்தில் மீதம் இருந்தவர்களை அணுகி 'இந்த ஊரில் ஒரு குளம் வெட்ட வேண்டும்’ என்றபோது என்னைக் கேலியும் கிண்டலுமாகப் பார்த்தனர். என் நண்பர்கள்கூட என்னை நம்பவில்லை. இருப்பினும் நான் நம்பிக்கையைக் கைவிடவில்லை. தன்னந்தனியாக குளம் வெட்டத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் 10-ல் இருந்து 12 மணி நேரம் இதற்காகச் செலவிட்டேன். என்னை ஒரு பைத்தியக்காரனைப்போல பார்த்தார்கள். ஆனால், என் மன உறுதியை நான் அதிகரித்துக்கொண்டே இருந்தேன். ஒன்று, இரண்டு... மொத்தம் நான்கு ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்து அந்தக் குளத்தை வெட்டி முடித்தேன். அடுத்து வந்த மழையில் குளம் நிரம்பியது. தண்ணீர் குளத்தில் தேங்கி நிற்கத் தொடங்கியதும், அதைச் சுற்றியிருந்தப் பகுதிகளின் நீர் மட்டம் அதிகரித்தது. கிராமத்தில் செழிப்பு எட்டிப் பார்த்தது. ஒருசிலர் விவசாயம் செய்யத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து மேலும் சிலர் தொடங்க... இந்தச் செய்தி, இடம்பெயர்ந்து சென்றிருந்த கிராமத்தின் இளைஞர்களுக்குச் சென்றது. அவர்கள் ஊருக்குத் திரும்பிவந்து உற்சாகத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டனர்.
கோபால்புராவுடன் இந்த மாற்றம் நின்றுவிடவில்லை. அருகில் உள்ள கிராமங்களில் இருப்பவர்கள் எல்லோரும் இவர்களின் உறவினர்கள்தான். விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சொந்த கிராமங்களுக்குத் திரும்பினர். எல்லோரும் 'கோபால்புரா’வை ஒரு முன்மாதிரி கிராமமாகக்கொண்டு தங்கள் ஊர்களிலும் குளங்களை வெட்ட ஆரம்பித்தனர். மக்களின் ஆர்வத்தைச் செயலாக மாற்றும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஒரே ஆண்டில்
36 கிராமங்களில் குளம் வெட்டி முடித்தோம். அதன்பிறகு செய்த ஒவ்வொரு செயலுக்கும் மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது. எந்த ஒரு நீர் ஆதார முயற்சிக்கும் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் பங்கேற்பும் மிக மிக அவசியம். ஆரம்பத்தில் அவர்கள் தயங்கி, ஒதுங்கினாலும் படிப்படியாக இணைந்துகொள்வார்கள். மக்கள் பங்களிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமும், அதன் நோக்கத்தை நிறைவுசெய்வது இல்லை என்பது எங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.''
''பல்லாண்டுகளாகத் தண்ணீரே பாயாத நதி ஒன்றை மீட்டெடுத்தீர்கள் எனச் சொல்லப்படுகிறதே... அதைப் பற்றி சொல்லுங்கள்?''
''ஒருகாலத்தில் ஏராளமான கிராமங்களை வளம் அடையச் செய்த நதி ஆர்வாரி. ஆனால், காலப்போக்கில் அது அடியோடு வறண்டுவிட்டது. அதை மீட்க மக்களின் உதவியுடன் களம் இறங்கினோம். ஆற்றுப்படுகை முழுக்க சிறிது, சிறிதாக ஏராளமான தடுப்பணைகள் கட்டினோம். வசதிப்படும் இடத்தில் கட்டாமல், எங்கு நிலப்பிளவு இருக்கிறதோ அங்கு அணை கட்டினோம். அணைகள் அந்தந்த நிலப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப கட்டப்பட்டன. தண்ணீர், மலையில் இருந்து கீழே விழும் இடத்தில் அதன் வேகம் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களில் வேகம் குறைவாக இருக்கும். இதைக் கருத்தில்கொண்டு, அணையின் வடிவத்தை ஒவ்வோர் இடத்துக்கும் ஏற்றாற்போல மாற்றிக்கொண்டோம். அணை என்றால் நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் தோற்றத்தில் அது இருக்காது. முக்கோணமாக, நீளமாக, உள்ளே வளைந்து... என இடத்தின் தேவைக்கு ஏற்ப இருக்கும். நாங்கள் இரும்பு, சிமென்ட் கொண்டு அணை கட்டுவது இல்லை. சுண்ணாம்பு, கல், மண் என பாரம்பர்யப் பொருட்களைக்கொண்டே கட்டுவதால், இது சாத்தியம். இப்படி ஆர்வாரி நதியில் மொத்தம் 115 தடுப்பணைகள் கட்டினோம். பெய்யும் மழைநீர் நிலத்தடி நீராகவும், நிலத்தின் மேற்பகுதி நீராகவும் சேர்ந்தது. படிப்படியாக எல்லாம் உயிர்பெற்று... ஆர்ப்பரித்து ஓடத் தொடங்கியது ஆர்வாரி நதி. எத்தனையோ ஆண்டுகளாகத் தூர்ந்துகிடந்த அந்த நதி, 1995-ம் ஆண்டு முதல் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடும் நதியாக மாறியிருக்கிறது. ஒரு குளத்தில் தொடங்கிய மாற்றம், ஒரு நதியை மீட்கும் பெரும் வெற்றியில் முடிந்தது!
இதைத் தொடர்ந்து ஆரவல்லி மலைகளின் குறுக்கே சிறுசிறு தடுப்பணைகளும் 7 மீட்டர் உயரம்கொண்ட காங்கிரீட் அணையும் கட்டினோம். இதனால், 60 ஆண்டுகளாக வறண்டிருந்த ஆரவல்லி ஆற்றில் மீண்டும் தண்ணீர் ததும்பியது. அது அப்படியே தொடர்ந்து ரூபரேல், சர்ஸா, பஹானி, ஜஹாஜ்வாலி என வறண்டுகிடந்த நான்கு நதிகளை மீட்டோம். இந்த நதிகளை நாங்கள் உருவாக்கவில்லை; கண்டுபிடிக்கவில்லை. அவை ஏற்கெனவே இருந்தன. ஆனால் கைவிடப்பட்டிருந்தன. அவற்றை மீண்டும் உயிர்த்துடிப்புள்ள நதிகளாக மாற்றினோம். இவற்றையும் சேர்த்து, ராஜஸ்தான் மாவட்டத்தின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகள் கட்டியிருக்கிறோம். இதன் விளைவாக வறண்டு கிடந்த ஒரு லட்சம் கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. வறண்டு கிடந்த பூமியில் இப்போது விவசாயம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு 450 மி.மீ மழை மட்டுமே பெறும் அல்வார் மாவட்டத்தில், ஒரு ஹெக்டேர் நிலத்தில் 4,600 ரூபாய் வருமானம் எடுத்த விவசாயிகள், தற்போது 31 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கிறார்கள். ஒரு காலத்தில் மானாவாரி பயிர்கூட செய்ய முடியாமல் தவித்த கிராமங்களில், இப்போது அதிக தண்ணீர் தேவைப்படும் கரும்பை பயிர் செய்கிறார்கள்.''
'' 'கடவுள், தமிழ்நாட்டுக்கு அதிகம் மழையைக் கொடுத்துக் கெடுத்துவைத்துள்ளார்’ எனச் சொல்லியிருக்கிறீர்களே..?''
''ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்கியிருக்கும் நிலையில், இதில் பாதியளவே மழை பெறும் ராஜஸ்தானில் அந்தப் பிரச்னை இல்லை. இது ஏன்? சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் தண்ணீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெயர் அளவுக்கே செய்யப்படுகின்றன. பக்கத்து மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்; அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை.'' https://www.facebook.com/SPACE-195178687352522/

ஞாயிறு, 1 நவம்பர், 2015

புதர் மேடாக இருந்து புத்துயிர் பெற்ற ஏரி             November 1, 2015

சிறப்புக் கட்டுரைகள் - டி.எல்.சஞ்சீவிகுமார்  

    



இன்று: கடல்போல் விரிந்து காணப்படும் வாலாஜா ஏரி.
இன்று: கடல்போல் விரிந்து காணப்படும் வாலாஜா ஏரி. 

                நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஏரியில் தற்போது கடல்போல ததும்பி நிற்கிறது தண்ணீர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. அரை நூற்றாண்டு கழித்து அங்கே வசந்தம் பிறந்திருக்கிறது. சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில்தான். வாருங்கள், சாதனைக் கதையை திரும்பிப் பார்ப்போம்!
2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்துகிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது. பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன. ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.
ககன் தீப் சிங் பேடி கண்ட கனவு
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். அவர் சொன்னது இதுதான்: “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது. சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் கொண்ட கதவணை இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது.”
வாலாஜாவின் நீராதாரம் பரவனாறு, காவிரி
கடலூர் மாவட்டத்தில் ஓடும் பரவனாறுதான் அங்கிருக்கும் ஏரிகளுக்கெல்லாம் நீர் ஆதாரம். கம்மாபுரம் ஏரி, கொம்பாடிகுப்பம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஒவ்வொன்றாக நிரப்பிவிட்டே பரவனாறு கடலுக்கு செல்கிறது. வாலாஜா ஏரிக்கு பரவனாற்றின் தண்ணீர் மட்டுமின்றி, கூடுதலாக வெள்ளாறு - ராஜன் வாய்க்கால் மூலம் மேட்டூர் - கல்லணை வழியாக காவிரியின் தண்ணீரும் கிடைத்துக்கொண்டிருந்தது. இதிலிருந்தே தமிழகத்தின் ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த அல்லது அறுந்துபோன தொடர்புகளை புரிந்து கொள்ளலாம்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி அழிந்தேபோனது. எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம்
அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம் பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிட வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.
பத்தாண்டு பொறுமை
வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன் தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.
இன்னொரு பக்கம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். மிகப் பெரிய திட்டம் என்பதால் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை மீட்க வேண்டும் என்றாலும்கூட குறைந்தது ரூ.10 கோடி தேவை. ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி. நிர்வாகம்.
பணி தொடங்கியது
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.
 - துரைக்கண்ணு
‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, “மிகப் பெரிய ராட்சத இயந்திரங்களா லேயே அந்த புதர்க் காட்டுக்குள்ள நுழைய முடியலை. தவிர, அந்த இடம் சதுப்பு நிலமாக இருந்ததால் வண்டிச் சக்கரங்கள் மண்ணுக்குள் புதைந்து விடும். பல சமயம் பாம்புகள் வண்டிக்குள்ளேயே ஏறிடும். புதர்களை வெட்டி போட்டுட்டே வந்தப்ப ஒரு இடத்துல துருப்பிடிச்சுப்போன நிலையில 15 கதவுகள் கொண்ட மிகப் பெரிய ஷட்டர் கிடந்தது. அங்கே ‘1851’ன்னு பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இருந்தது. ஏரியை உருவாக்கின ஆண்டு அது.
வேலை தொடங்கிய 10-வது நாளிலேயே பெரிய மழை. ஏற்கெனவே சதுப்பு நிலத்துல மண்ணைத் தோண்டி குவிச்சிருந்ததால அதுவும் சரிஞ்சு பெரிய புதைகுழிபோல ஆகிடுச்சு. கொஞ்சம் தவறினாலும் வண்டிகள் பூமிக்குள்ள புதைஞ்சுடும். வேலை மொத்தமா நின்னுப்போச்சு. ஆழம் தெரியாம காலை விட்டுட்டோமாங்கிற சந்தேகம் வந்துடுச்சு.
புதுசா ஒரு திட்டம் போட்ேடாம். ஏரியை இரண்டா பிரிச்சோம். ஏரியோட ஒரு பக்கம் ஓரளவு காய்ந்த நிலமா இருந்தது. இன்னொரு பக்கத்துக்கு சுரங்கத்துல இருந்த வெளியேத்துற தண்ணீர் வந்தபடி இருந்தது. ரெண்டுக்கும் நடுவுல மிகப் பெரிய மண் சுவரை எழுப்பினோம். முதலில் காய்ந்த நிலத்துல தூர் வாரத் தொடங்கினோம். சதுப்பு நிலப் பகுதியில் சில நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேத்துல இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி அதை பெருமாள் ஏரிக்கு அனுப்பினோம். காய்ந்த நிலத்தை வெட்டி முடிக்கிறதுக்குள்ள சதுப்பு நிலம் முழுமையாக காய்ஞ்சிடுச்சு. அதையும் வெட்டி முடிச்சோம்.
விவசாயிகளின் தியாகம்
அடுத்து கால்வாய்கள் தூர் வாரும் பணி. மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்று கிற நிலத்தடி தண்ணீ ரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷ மாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. சுமார் 15 கிராமங்கள். எல்லோ ரும் வறட்சியால பாதிக்கப்பட்டிருக்கிற சிறு விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித் துப்பாடு என்னாகு மோன்னு கலக்கமாக இருந்தது. ஒருநாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. எங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.
கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினீயருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை. ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம். பழைய ஷட்டரை பெயர்த்து எடுத்துட்டு புதுசா 15 கதவுகளைக் கொண்ட ஷட்டரை பொருத்தினோம்.
 
புதுப்பொலிவடைந்த ஷட்டர
இறுதியாக கரைகளை எழுப்புற வேலை. ஏரியில வாருன மண்ணைக் கொண்டே நான்கு கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப் பெரிய கரையை எழுப்பினோம். கரை சரிவுல வனத்துறையினர் 40,000 தேக்கு மரக் கன்றுகளை நட்டாங்க. ஏரியின் ஒரு பக்கம் ஒன்றரை மீட்டர் ஆழம் தொடங்கி மறுபக்கம் அரை மீட்டர் வரை 23 லட்சம் கனமீட்டர் (400 ஏக்கர்) தோண்டி முடிச்சோம். இதன் மூலம் ஏரியின் மொத்த ஆழம் 5 மீட்டர் ஆனது. இதில் 4.5 மீட்டர் வரைக்கும் 22 லட்சம் கனமீட்டர் தண்ணீர் தேக்கலாம்” என்றார் பூரிப்புடன்.
‘எனது ஆயுளுக்குள் பார்த்துவிட்டேன்’
இதுகுறித்து வாலாஜா ஏரி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் எஸ்.ராமானுஜம் கூறும்போது, “எனது இளம் வயதில் அந்த ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறேன். அதன் பின்பு பொட்டல் காடாக அந்த இடம் மண் மூடிவிட்டது. எனது ஆயுளுக்குள் அந்த ஏரியை மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2015 ஜூலை - டிசம்பர் பட்டத்தில் 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக் கின்றன. சம்பா சாகுபடிக்குப் பின் குறுவை நடப்படாத பகுதியிலும் பிப்ரவரி - ஜூன் பட்டத்தில் 2-ம் போகமும் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ஏரியை வெட்டியது யார்?
வாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. 17-ம் நூற்றாண்டில் ஒடிசா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை முகமது அலிகான் வாலாஜா நவாப் ஆட்சி செய்தார்.
இவர் விருப்பத்தின் பெயரில்தான் ஆங்கிலேயர்கள் சென்னையில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். அதன் பிறகு 1825 - 1855 வரை 13-வது நவாபாக ஆட்சிக்கு வந்தவர் குலாம் முகம்மது கவுஸ்கான். இவர் வாரிசு இன்றி இறந்ததால் ஆட்சி ஆங்கிலேயர் வசம் சென்றது. அதேசமயம் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு 1780-ல் கடலூர் நகரம், ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்பு 1783-ல் நடந்த கடலூர் போரில் ஆங்கிலேயர்கள் இந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், ஏரியை ஆங்கிலேயர் வெட்டியிருக்கலாம்; ஆனால், வாலாஜா மன்னர் மீதிருந்த அபிமானம் காரணமாக மக்கள் இந்த ஏரியை ‘வாலாஜா ஏரி’ என்று அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எல்லா பெருமையும் விவசாயிகளுக்கே..
 - ககன் தீப் சிங் பேடி
திட்டத்துக்கு வித்திட்ட ககன் தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும் என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும். எனக்கு தெரிந்து இப்படி ஏரி நம் நாட்டிலேயே வேறு எங்கேயும் மீட்கப்பட்டது இல்லை. இப்படி ஒரு ஏரி இருந்தது என்பதை முதன்முதலில் விவசாயிகள் சிலர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டம் அப்போது கடும் வறட்சியில் இருந்தது. அதேசமயம் ஏரி மண் மூடிக்கிடந்ததால் மழைக்காலத்தில் அங்கு வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனால், எப்படியாவது இந்த ஏரியை மீட்க வேண்டும் என்று நினைத்தோம். என்.எல்.சி. நிறுவனத்தை சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் அதை செய்ய வைத்தோம். மீதமுள்ள ஏரியையும் அந்த நிறுவனம் மூலம் மீட்க முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும்” என்றார்.
அயராத உழைப்பால் ஏரியை சீரமைத்த கிராம மக்கள்.https://www.facebook.com/SPACE-195178687352522/

தி இந்து

செவ்வாய், 27 அக்டோபர், 2015

வீணாக ஓடிய மழைநீர் தடுப்பணை கட்டி சேமிப்பு: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சாதனை

                                      பாரதியார் பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை.

மழை பெய்யும் நாட்களில் சில மணி நேரங்கள் மட்டுமே தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இரண்டு ஓடைகளை ஒருங்கிணைத்து ‘பாரதியார் தடுப்பணை’ யைக் கட்டியிருக்கிறது கோவை பாரதியார் பல்கலைக்கழகம்.
இதன் மூலம் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் வரை 22 லட்சம் லிட்டர் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்ததுடன், அந்தப் பகுதியின் வனவிலங்குகளுக்கு குடிநீர் ஆதார மாகவும் விளங்குகிறது பாரதியார் தடுப்பணை.
மருதமலை அருகே அமைந்தி ருக்கிறது கோவை பாரதியார் பல் கலைக்கழகம். வனங்கள் சூழ்ந்த பகுதி இது. இங்கு யானை, கரடி, காட்டுப் பன்றி, காட்டு மாடு, மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. ஆனாலும், இவற் றால் பல்கலைக்கழகத்துக்கு பெரி யளவில் தொந்தரவு கிடையாது.
அதேநேரம், இத்தனைக் கால மாக இந்த வனவிலங்குகளுக்கு பல்கலைக்கழகம் அருகே குடிநீர் ஆதாரம் எதுவும் இருந்ததில்லை. இதனால், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் அருகிலுள்ள மக்கள் வாழிடங்களுக்கு சென்று சேதம் விளைவித்துக்கொண்டிருந்தன.
இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக் கழக வளாகத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தடுப்பணை கட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பாரதியார் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் துறைப் பேராசிரியர் அ.மணிமேகலன் ‘தி இந்து’விடம் கூறுகையில், “மருதமலையிலிருந்து ஆனைப்பள்ளம் என்கிற பெரிய ஓடை ஒன்றும், பெயர் இல்லாத சிறிய ஓடை ஒன்றும் பல்கலைக்கழக வளாகம் வழியாக ஓடி, வீரகேரளம் பகுதி அருகே கிருஷ்ணாம்பதி ஏரி, செல்வாம்பதி ஏரி, குமாரசாமி ஏரி, நரசாம்பாதி ஏரி ஆகிய ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி, இறுதியில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. ஆனால், மழை வரும் நாட்களில் சில மணி நேரம் மட்டுமே இந்த ஓடைகளில் தண்ணீர் ஓடும்.
இந்த நிலையில்தான் சில மாதங் களுக்கு முன்பு பல்கலைக்கழகத் தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஜேம்ஸ் பிச்சை வழி காட்டுதலின்படி பல்கலைக்கழக வளாகத்தில் தடுப்பணையைக் கட்டும் திட்டம் தீட்டப்பட்டது. இதற் கான பணிகளை பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை மேற்கொண்டது. தடுப்பணையின் கட்டுமானச் செலவுகளை கோவையைச் சேர்ந்த விஜயலட்சுமி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.
இந்த இரு ஓடைகளும் பல் கலைக்கழக வளாகத்தில் இணை யும் இடத்தில் இயற்கையான பள்ளம் இருந்தது. அதனை மேலும் ஆழப்படுத்தினோம். இறுதியாக 190 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம், 15 மீட்டர் ஆழம் கொண்ட தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது. இதில் 22 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடிகிறது.
தவிர, பல்கலைக்கழக வளாகத் தில் பெய்யும் மொத்த மழைநீரும் இந்த தடுப்பணைக்குச் சென்று சேரும் வகையில் வளாகம் முழுவதும் பூமிக்குள் குழாய்கள் பதித்தோம். இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. மழைக் காலம் தொடங்கியது முதல் கடந்த 3 மாதங்களாக இந்த தடுப்பணையில் நிரந்தரமாக சுமார் 10 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீர் சுமார் 6 மாதங்கள் வரை தேங்கி நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பணையைச் சுற்றிலும் வனத்துறை உதவியுடன் புன்னை, அத்தி, நீர் மத்தி, ஆலம், நாவல், மூங்கில் உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக விலங்கியல் துறை சார்பில் கட்லா, ரோகு, மிருகால் ரக 60,000 மீன் குஞ்சுகள் தடுப்பணையில் விட்டு வளர்க்கப்படுகின்றன. யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணையின் ஒருபக்கத்தில் சரிவான பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு தினசரி இரவுகளில் வன விலங்குகள் தண்ணீர் குடித்து விட்டு சென்றதற்கான காலடித் தடங்கள் காணப்படுகின்றன.
இந்த தடுப்பணை பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல், விலங்கியல், தாவரவியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறை மாணவர்களின் ஆய்வுகளுக்கும் பெரிதும் உதவுகிறது.
மேலும், தடுப்பணையில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் தண்ணீர் நிற்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந் துள்ளது.” என்றார்.
ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அழிந்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத் தின் முயற்சி பாராட்டுக்குரிய தாகும்.https://www.facebook.com/SPACE-195178687352522/

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

           சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..



                                    எந்த உலக நாட்டு இளைஞர்களுக்கும் இந்திய இளைஞர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. ஆனால் துரதிருஷ்டம் நம்மவர்களிடம் தன்னம்பிக்கை, தன்னார்வம் குறைவு.
யாரைப் பிடித்தாவது, யார் காலில் விழுந்தாவது வேலை வாங்கி விட வேண்டும். அது அரசுத் துறையாகவும் இருக்காலம். அல்லது தனியார் துறையாகவும் இருக்கலாம். ஆனால் வேலை பார்த்து மாதச் சம்பளம் பெறுவது ஒன்றே இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோரின் லட்சியமாக உள்ளது.
சுயமாக தொழில் தொடங்கி நாமும் முன்னேறி மற்றவர்களின் முன்னேற்றத்துக்கும் வழி வகுப்போம் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் மிகக் குறைவு. சுய தொழில் தொடங்க, இளைஞர்களை ஊக்குவிக்க அரசும் தன்னார்வ அமைப்புகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
சுய தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கும், ஏற்கெனவே சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழிகாட்டுதல்களையும், பயிற்சியையும், இலவச ஆலோசனைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) அளித்து வருகிறது.
மத்திய அரசின் விதிகளின்படி 8-ம் வகுப்பு தேறியவர்கள் முதல், இந்த பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் பெற முடியும்.
இந்தப் பணியில் மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.எம்.இ. முக்கிய பங்காற்றி வருகிறது. சுய தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சிகளையும், இலவச ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை கிண்டியில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதுதவிர கோவை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட சில நகரங்களில் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

என்னென்ன பயிற்சிகள்?

                                                        டர்னர், மில்லர், பிட்டர், சிஎன்சி ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பழுது பார்த்தல், தயாரித்தல், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், நவ ரத்தினக் கற்கள் பட்டை தீட்டுதல், நகைகள் தயாரித்தல், இயந்திரவியல், பொறியியல், மின்சாரம், மின்னணுத் துறை, தோல், பீங்கான் மற்றும் கண்ணாடி, ரசாயணம் உள்ளிட்ட துறைகளில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பொருத்தமான சுய தொழிலை தேர்வு செய்வது எப்படி, தொழிலை பதிவு செய்வது எப்படி, உரிமம் எங்கு பெறவேண்டும், கடன் பெற என்னென்ன வழிகள் உள்ளன, தொழிலுக்கு சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது, தொழில் கூடங்களை நவீனமயமாக்குவது எப்படி என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இலவசமாக இந்த மையங்களில் அளிக்கப்படுகின்றன.
பெட்டிக்கடை ஆரம்பிக்க விரும்புபவர்களிலிருந்து  உற்பத்தித் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் வரை இந்த நிறுவனத்தை அனுகலாம்.

நூலகம்

          எம்.எஸ்.எம்.இ. மையங்கள் அனைத்திலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில், பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துவங்குவதற்கு உதவியாக 800-க்கும் மேற்பட்ட மாதிரி திட்ட அறிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகளை, தொழில் தொடங்க முனைவோர் பார்த்து பயன்பெறலாம். ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்கு ஒரு முறை தொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை, மாவட்ட வாரியாக தயாரித்து வைக்கப்படுகிறது.

வங்கிகளுடன் கூட்டு

                                              சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள் எளிதாக கடன் பெறும் வகையில், எம்.எஸ்.எம்.இ. நிறுவனம், இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது. வங்கிகள், கடன் கோரும்  நபரின் தொழில் திட்டத்தை ஆய்வு செய்து, அதற்கேற்ப கடன்களை வழங்குகின்றன.

புதிய திட்டங்கள்

                                        சுய தொழில் தொடங்க முன்வருவோருக்கு, மூலதனத்தில் மானியம் அளிக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. அண்மையில் பிரதமரின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி ரூ. 25 லட்சம் வரையிலான திட்ட மதிப்புடைய உற்பத்தித் தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மூலதனத்தில் 15 முதல் 35 சதவீதம் வரை அந்தந்த தொழிலுக்கு ஏற்றபடி மானியம் வழங்கப்படும். இதுபோல் ரூ. 10 லட்சம் வரை திட்ட மதிப்புடைய சேவை நிறுவனங்களை தொடங்குபவர்களுக்கும் மூலதனத் தொகையில் 15 முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே, வேலை கிடைக்கவில்லை என்று ஏங்காமல், சுயதொழில் துவங்கி மற்றவர்களுக்கு வேலை தரும் ஆதாரமாக மாறுங்கள் இளைஞர்களே...https://www.facebook.com/SPACE-195178687352522
ஊத்துக்கோட்டை அருகே சென்னைக்கு குடிநீர் வழங்க 1100 ஏக்கரில் புதிய ஏரி: டிசம்பரில் தண்ணீரை தேக்க ஏற்பாடு

 பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, செப்டம்பர் 21

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகள் அனைத்தும் மழை நீரை நம்பிதான் உள்ளது. பூண்டி ஏரிக்கு மட்டும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வருவது வழக்கம்.
இதே போல் வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையின் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆறு மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
மழை பொய்ந்து விடும் போது கோடை காலங்களில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டையில் உள்ள ஏரிகளை ஒன்று சேர்த்து ரூ.330 கோடி செலவில் மிக பிரம்மாண்ட நீர் தேக்கம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தார்.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை பகுதிகள் இயற்கையாகவே ஆழமான பகுதிகளாக உள்ளன. மேற்கூறப்பட்ட 2 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு ஆந்திர மாநிலம் சத்தியவேடு காட்டு பகுதிகளில் உள்ள மதனம்பேடு, பாலகிருஷ்ணாபுரம், மதனஞ்சேரி, ராஜகுண்டா ஆகிய ஓடைகள் மூலம் வருடத்துக்கு 0.3 டிஎம்சி மழை நீர் வருகிறது. ஆனால் மேற்கூறப்பட்ட 2 ஏரிகளில் 41 மில்லியன் கனஅடி நீர் மட்டும் சேமித்து வைக்க முடியும். மீதமுள்ள தண்ணீர் வங்க கடலில் வீணாக போய் சேருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த பகுதியை நீர் தேக்கம் அமைக்க தேர்ந்தெடுத்தது.
நீர் தேக்கம் அமைக்க, கிருஷ்ணா நதி நீரை கண்ணன் கோட்டை நீர் தேக்கத்துக்கு கொண்டு செல்ல கால்வாய் அமைக்க 1485 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில் 800 ஏக்கர் பட்டா நிலம். 630 ஏக்கர் புறம்போக்கு நிலம். 55 ஏக்கர் வனத்துறைக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. பட்டா நிலம் உரிமையாளர்களுக்கு ஏக்கர் 1க்கு ரூ. 13 லட்சம் விதம் 477 பேருக்கு அரசு பணம் பட்டுவாடா செய்துள்ளது. மீதம் உள்ள 250 பேர் பணம் வாங்க மறுப்பதால் பணத்தை பொன்னேரி கோர்ட்டில் அரசு செலுத்தி உள்ளது. கண்ணன் கோட்டை– தேர்வாய் ஏரிகளை ஒன்றிணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. நீர் தேக்கம் மட்டும் 1100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. 385 ஏக்கர் நிலப்பரப்பில் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 14 மீட்டர் உயரத்தில் 11½ கிலோ மீட்டர் சுற்றளவில் நீர் தேக்கம் அமைக்கப்படுகிறது. 1 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் விதத்தில் நீர் தேக்கம் கட்டப்படுகிறது.
அதாவது 1000 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளியில் கால்வாயின் குருக்கே தடுப்பு அமைத்து அங்கிருந்து கண்ணன் கோட்டை நீர் தேக்கத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல உள்ளனர்.
சத்தியவேடு காட்டு பகுதியில் உள்ள ஓடைகளின் நீரும், கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும். இதற்காக ஜங்காலபள்ளியிலிருந்து கண்ணன்கோட்டை நீர் தேக்கம் வரை 8.30 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.
கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமிக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் 13 கிலோ மீட்டர் தூரத்தில் ஊத்துக்கோட்டை அம்பேத்கார்நகர் பகுதியில் கிருஷ்ணா கால்வாய்க்கு அனுப்பி, அங்கிருந்து தண்ணீர் பூண்டி வந்து சென்னைக்கு அனுப்பப்படும். இதற்காக கண்ணன் கோட்டை நீர் தேக்கத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் ரூ. 100 கோடி செலவில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க உள்ளனர்.
நீர்தேக்கம் அமைக்கும் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், டிசம்பரில் தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.https://www.facebook.com/SPACE-195178687352522

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

BUSH BETTA FOOD - 20gm - 35rs
FEATURES:
Bush Fish Food are floating pellets that will cloud water.Bush Fish Food are manufactured by automation from select ingredient under strict quality Control.
FEEDING
Feed Bush Fish Food two or three times daily according to suitable water temperature.Fish will consume within five to ten minutes.
INGREDIENTS
Fish meal,Wheat meal,Yeast,Germ meal, Vegetables,Spirulina,Shrimp meal vitamins and Mineral Suppliements,etc..........!

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

BETTA - FEEDING

Bettas are carnivorous and can be fed flake or pelleted food. Please refer to the food packaging for feeding guidelines so you do not overfeed.
Bettas also enjoy eating frozen or freeze-dried bloodworms, tubifex worms, mosquito larvae and daphnia. When feeding Bettas frozen food, please make sure that it is thawed.https://www.facebook.com/pages/SPACE/195178687352522
BETTA 

CARE AND MAINTENANCE:



Keeping your Betta's habitat clean is an ongoing process.
Daily Maintenance
Feed a small amount twice daily, or as directed by food packaging.
Check that water is kept between 74° and 85° Fahrenheit.
Weekly Maintenance
Change the bowl water weekly, making sure that it is dechlorinated and at the correct temperature.
Make sure that the environment is free of debris.
Scrub any algae that accumulate on the glass.
Monthly Maintenance
For an aquarium-dwelling Betta, vacuum gravel and perform a 25% partial water change with dechlorinated water.
Test water quality in an established aquarium. PetSmart will perform a free test if you bring in an aquarium water sample.
Maintain filter (replace cartridge, carbon, rinse pre-filter, etc)
Prune live plants.